பக்கம் எண் :

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

 

செயற்கு அரிய செய்வார் பெரியர் - உயர்திணை எனப்படும் மக்களுள் பிறர் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்து முடிப்பவர் பெரியோர்; செயற்கு அரிய செய்கலாகாதார் சிறியர் - பிறர் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்யாது எளிய செயல்களையே செய்து முடிப்பவர் சிறியோர்.

"செயற்கரியவாவன இயமம் நியமம் முதலாய எண்வகை யோக வுறுப்புகள்". என்பர் பரிமேலழகர். எண்வகை ஓக உறுப்புகள் கடிவு (இமயம்), நோன்பு (நியமம்), இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராணாயாமம்), ஒருக்கம் (பிரத்தியாகாரம்), நிறை (தாரணை), ஊழ்கம் (தியானம்), ஒன்றுகை (சமாதி) என்பன. இவற்றுள் ஒருக்கமும் நிறையுமான மனவடக்கம் சிறந்ததாம்.

"வெந்தழலி னிரதம்வைத் தைந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல்கொளலாம்
சந்ததமு மிளமையோ டிருக்கலா மற்றொரு
சரீரத்தினும் புகுதலாம்
சலமே னடக்கலாம் கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது"

என்றார் தாயுமான அடிகள். ஆதலால், மனமடக்குதலும் அவாவறுத்தலுமே செயற்கரிய செயல்கள் என அறிக.

செயற்கெளியவாவன உலகத்தொழில் செய்தலும் பொருளீட்டுதலும் இன்பந்துய்த்தலும் எளியாரை வாட்டுதலுமாம். இல்லறம் துறவறத்தை நோக்க எளிதாயினும், அதையுஞ்செய்ய இயலாதவர் சிலர் உளர். அவரே சிறியர் என்னுங் கருத்தினர் "செயற்குரிய செய்கலாதார்" என்று பாட வேறுபாடு காட்டுவர். அவ்வேறுபாடு பெரியர் சிறியர் என்னும் இரு வகுப்பார்க்கும் இடையே வேறொரு வகுப்பாரையும் வேண்டுதலின், அது அத்துணைச் சிறந்ததன்றாம்.