பக்கம் எண் :

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்க டவம்.

 

மற்றை யவர்கள் - துறவிய ரல்லாத மற்ற இல்லறத்தார்; துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார் கொல்-துறவியர்க்கு ஊணுடையும் உறையுளும் மருந்தும் முதலிய கொடுத்துதவுதலை விரும்பியே, தாம் தவஞ் செய்தலை மறந்தார் போலும்!

துத்தல் உண்ணுதல் அல்லது நுகர்தல். துப்பரவு நுகரப்படும் பொருள்கள். தவம் சிறந்ததே யாயினும் , எல்லாருந் துறவியராயின் தவஞ் செய்வார்க்கு இன்றியமையாதவற்றை உதவுவார் ஒருவருமில்லாது போய் விடுவராதலின்,அவ்வுண்மையை ஓர் ஐயந்தழுவிய தற்குறிப் பேற்ற அணியால் உணர்த்தினார். 'கொல்' ஐயம்.