பக்கம் எண் :

வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப் படும்.

 

வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலால் - தவத்தின் பயனாக மறுமையில் தாம் விரும்பிய பேறுகளையெல்லாம் விரும்பியவாறே பெறக்கூடிய நிலைமையிருத்தலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்ய வேண்டிய தவம் இம்மையில் அறிவுடையோரால் முயன்று செய்யப்படும்.

'ஈண்டு முயலப்படும் ' என்றதனால் மறுமையிற் பயன்படும் என்பது பெறப்பட்டது. 'வேண்டிய' என்றவை மண்ணின்பமும் விண்ணின்பமும் வீட்டின்பமு மாகிய மூவகை யின்பங்கள்.

இல்லறத்தாலும் இம் மூன்றையும் பெறலாம். இவ்விரு வழிகளுள் ஒன்றைத் தெரிந்து கொள்வது அவரவர் ஆற்றலையும் விருப்பத்தையும் பொறுத்தது. அன்புடைமை , விருந்தோம்பல் , நடுநிலைமை, ஒப்புரவறிதல் , ஈகை முதலிய அறங்கள் ஆரியர் மேற்கொள்ளுதற்கு அரியனவாகலின், அவர் துறவறத்தையே விரும்புவர். அதனாலேயே, "மேற்கதி வீடுபேறுகள் தவத்தானன்றி எய்தப்படா" என்றார் பரிமேலழகர் . கூடா வொழுக்கமும் போலித் துறவும் பூண்டு கொண்டே ஒருவன் மெய்த்துறவிபோல் நடிக்கலாம். இந்நடிப்பு இல்லறத்தில் இயலாது.