பக்கம் எண் :

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா
ரவஞ்செய்வா ராசையுட் பட்டு.

 

தவம் செய்வார் தம் கருமம் செய்வார் - உலகப் பற்றைத் துறந்து தவஞ் செய்வாரே தம் கருமத்தைச் செய்பவராவர்; அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - அவரல்லாதார் பிறவிக்கேதுவான பொருளின்ப ஆசை வலையுள் அகப்பட்டுத் தமக்குக் கேடு செய்பவரேயாவர்.

'கருமம்' என்றது நன்மையான. கருமத்தை , தொடக்கமிலியாக (அநாதியாக)க் கணக்கற்ற பிறந்திறந்துழன்று வரும் ஆதன் (ஆன்மா) , அப் பிறவித் துன்பத்தினின்று விடுதலை பெற்றுப் பெயராப் பேரின்பந் துய்த்தற்கு , உடலை யொடுக்கி ஆசையை யடக்கி உள்ளத்தை யொருக்கி இறைவனொடு ஒன்றுவிக்கும் தவத்தை மேற்கொள்வதே தகுந்த வழியாதலின் , அதைச் செய்பவரைத் ' தங்கருமஞ் செய்வார்' என்றும் ; நிலையாது திடுமென்று மாய்வதும் பிணி மூப்பால் நலிவதுமாகிய உடம்பில் நின்று , மின்னல் போல் தோன்றி மறையுஞ் சிற்றின்பத்தை நுகர்தற் பொருட்டு, எல்லையில்லாது தொடந்து செல்லும் பிறவித் துன்பத்திற் கேதுவான தீவினைகளைச் செய்து கொள்பவரை ' அவஞ் செய்வார்' என்றுங் கூறினார்.

ஆசைக்கோ ரளவில்லை யாதலால் , தன்பொருட்டும் மனைவி மக்கள் பொருட்டும் ஆசைக் கடலுள் அழுந்தச் செய்யும் இல்லறத்தினும், தன்னந்தனியாயிருந்து தவத்தின் வாயிலாய் ஆசையறுக்கும் துறவறமே , வீடு பேற்றிற்குச் சிறந்த வழி யென்பது கருத்து.

இல்லறத்தானும் தன் கடமையை அற நூற்படி செய்வானாயின் தவஞ் செய்தவனாவான் என்றும் , பகவற் கீதையில் கூறியவாறு பயன் நோக்காது தன் கடமையைச் செய்பவன் கருமவோகி என்றும், இதற்குப் பொருள் கூறுவது பொருந்தாது. தவம் ஈரறத்திற்கும் ஓரளவிற் பொதுவாகுமே யன்றி இல்லறவினை துறவறவினை யாகாது.