பக்கம் எண் :

சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் என்னும் பூதமூலங்கள் ஐந்தின் கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்ந்தறியும் ஓகியின் அறிவிற்குள் அடங்கியதே உலகம்.

காட்சி ஒளியினால் தோன்றுதலின் ஒளியெனப்பட்டது. உறுவது ஊறு. உறுதலாவது உடம்பின் உள்ளும் புறம்பும் படுதல் அல்லது தொடுதல். உலக வழக்கில் தீய பொருளிலேயே வழங்கும் நாற்றம் என்னும் சொல், இங்கு நறுமைக்குந் தீமைக்கும் பொதுவாய் நின்றது.

உகு - யுஜ் (வ). ஓதம் - யோக (வ.g). ஓகி - யோகின் (வ.g).

ஐந்தின் கூறுபாடாவன, மேற்கூறிய பூதமூலம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய நிலம், நீர், தீ, வளி, (காற்று) வெளி என்னும் பூதங்கள் ஐந்தும், அவற்றொடு தொடர்புடைய புலனைக் கொண்ட மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் அறிவுப் பொறியைந்தும், அவற்றைப்போல் உடம்பின் கூறாகிய நாவு, கை, கால், அண்டி (எருவாய்) குறி (கருவாய்), கருமப்பொறி யைந்தும் ஆக இருபதுமாம். இனி, 'வகைதெரிவான் கட்டு' என்றதினால், தெரிகின்ற ஆதனும் (புருடனும்) , அவன் தெரிதற் கருவியாகிய மதி (மான்) தன்முனைப்பு (அகங்கார) மனங்களும், அவற்றிற்கு. முதலாகிய சித்தமும் (மூலப்பகுதியும்) பெறப்படும்.

இவற்றை ஆராயும் வகை : -

ஆதன் தான் ஒன்றினின்று தோன்றாமையாலும் பிறிதொன்றைத் தோற்றுவியாமையாலும் தனிநிலையாம்.

மூல முதனிலை ( சித்தம் ) தான் ஒன்றினின்று தோன்றாமையால் முதனிலையாம்.

மதியும் அதனின்று தன்முனைப்பும் அதனின்று பூத மூலங்களுமாக ஏழும், மூல முதனிலையினின்று முறையே தோன்றுவதனாலும் மன முதலியவற்றைத் தோற்றுவித்தலாலும் இடைநிலையாம்.

மனமும் அறிவுப்பொறிகளும் கருமப்பொறிகளும் பூதங்களுமாகிய பதினாறும், இடைநிலையினின்று தோன்றுவதனாலும் வேறெவற்றையுந் தோற்றுவியாமையாலும் இறுதிநிலையாம்.

இனி, சாங்கியத்திற்கு மாறாக,

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு


என்றமையால், எல்லாவற்றொடுங் கலந்துநின்று அவற்றையியக்கி முத்தொழிற்படுத்தும் இறைவனென்னும் முழு முதனிலையொடு சேர்க்க. மெய்ப்பொருள்கள் மொத்தம் இருபத்தாறாம். ஆகவே, "சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல்" என்பது தவறாம் துண்ணிய அடிப்படைப் பாகுபாட்டில், ஆவிவடிவான உயிராதனும் (சீவாத்துமாவும்) பரவாதனும் (பரமாத்துமாவும்) காற்றுள் அடங்குதலால், ஐந்தின் வகையென்று எல்லாவற்றையும் அடக்கினார் ஆசிரியர். வெளி என்னும் இடத்தின் உண்மை நீட்சி அல்லது தொடர்ச்சியே காலம்.

ஐம்பூதங்களும் அவற்றொடு தொடர்புள்ள பொறிபுலன்களும்

பூதம் பூதத்தன்மை பொறி புலன்
நிலம் நாற்றம் மூக்கு முகர்தல்
நீர் சுவை வாய் சுவைத்தல்
தீ ஒளி கண் காண்டல்
வளி ஊறு மெய் உறுதல்(தொடுதல்)
வெளி ஒசை செவி கேட்டல்

"வகை தெரிவான் கட்டு" என்றது உடம்பொடு புணர்த்தல் என்னும் உத்தி ; அதாவது, ஒர் உண்மையை அல்லது நெறியை வெளிப்படையாகக் கூறாது ஒரு சொல்லாட்சியாற் பெறவைத்தல். கண்ணது - கட்டு ( கண் + து ).

மூலப்பகுதியின் சேர்க்கையாற் கட்டுற்ற ஆதன் ( புருடன் ) அதைத்தன்னின் வேறாகக் காண்டலே வீடுபேறென்பது சாங்கியக் கொள்கை. அதிற் கடவுட் கொள்கையில்லை.