பக்கம் எண் :

இலர்பல ராகிய காரண நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

 

இலர் பலர் ஆகிய காரணம்-இவ்வுலகத்திற் செல்வர் சிலராகவும் வறியர் பலராகவும் இருத்தற்குக் கரணியம்; நோற்பார் சிலர் நோலாதவர் பலர்-தவஞ் செய்வார் சிலராகவும் அது செய்யாதவர் பலராகவும் இருத்தலே.

'கேடில் விழுச்செல்வங் கல்வி" (400) என்று ஆசிரியரே கூறுவதால், இங்குக் குறிக்கப்பட்ட செல்வ வறுமைகள் கல்வி பொருள் என்னும் இருவகைச் செல்வத்திற்கும் பொதுவாம். 'நோற்பார் சிலர்' என்னும் கரணியத்திற்குரிய கருமியம் கூறப்படாமையால் வருவித்துரைக்கப்பட்டது. இம்மை நிலைமையினின்று முன்னை வினைப்பயனுக்குக் கரணியம் உய்த்துணரப்பட்டன.