பக்கம் எண் :

அறத்துப் பால்
துறவறவியல்

அதிகாரம் 28. கூடாவொழுக்கம்

அஃதாவது, துறவறத்தொடும் தவக் கோலத்தொடும் பொருந்தாத தீய வொழுக்கம். அது பெண்ணின்பத்தை மறைவாக நுகர்தலும் அதற்குத்தக ஊட்டம் மிக்க உணவுண்ணுதலுமாம். உள்ளத்தில் உரனில்லாது சுடலையுணர்ச்சியினாலும் சொற்பொழிவுணர்ச்சியினாலும் திடுமென்று தூண்டப்பட்டுத் துறவுக் கோலம் பூண்டோர், பின்பு அதைக் கடைப்பிடிக்கும் ஆற்றலின்மையால் தாம் சிறிது போழ்துவிட்ட சிற்றின்பத்தை மீண்டும் (மறைவாக) நுகர்வர். இது தவத்தொடு பொருந்தாமையின் தவத்தின்பின் வைக்கப்பட்டது.

ஊட்டம் மிக்க உணவும் உடலைக் கொழுக்க வைத்துக் கூடாவொழுக்கத்திற்குத் தூண்டுமாதலின், அதுவுந்துறவறத்திற் கடியத்தக்கதே.

 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க
ளைந்து மகத்தே நகும்.

 

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் - பிறரை வஞ்சிக்கும் மனத்தை யுடையவனின் பொய் யொழுக்கத்தை; பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்-அவனுடம்பாய்க் கலந்துள்ள ஐம்பூதங்களும் கண்டு தம்முள்ளே எள்ளிச் சிரிக்கும்.

படிறு பொய். பிறர் காணவில்லை யென்று மறைவாகத் திருடும் திருடனின் திருட்டை, குறைந்த பக்கம் எங்கும் நிலைத்துள்ள நிலம் வளி வெளி என்னும் மூன்று பூதங்களேனும் தப்பாமற் காணும். ஆயின், கூடா வொழுக்கத்ததானது மனத்தின் பொய்த் தன்மையையும் மறைந்த காமவொழுக்கத்தையும் அவனுடற் கூறாகவும் ஐம் பொறிகளாகவுமுள்ள ஐம்பூதங்களும் காணுவதால், 'பூதங்களைந்தும்' என்றும், அவை அவனுக்கும் பிறர்க்கும் தெரியாமல் நகுவதால் 'அகத்தே நகும்' என்றும் கூறினார். இது மறை வொழுக்கத்திற்குத் தெய்வச்சான்றும் மனச்சான்றும் மட்டுமன்றிப் பூதச் சான்றும் உள்ள தெனக் கூறியவாறு. பிறரை ஏமாற்றுவதால் 'வஞ்சமனம்' என்றார்.