பக்கம் எண் :

வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந்
தானறி குற்றப் படின்.

 

தன் நெஞ்சம் அறிகுற்றம் தான் படின்-தன் நெஞ்சமே குற்றமென்றறிந்ததை ஒருவன் செய்வானாயின்; வான் உயர் தோற்றம் எவன் செய்யும்-அவனது வானளாவ வுயர்ந்த தவக் கோலம் பிறரை அச்சுறுத்துவதன்றி வேறு என்ன பயன்படுவதாம்?

வானுயர்வு என்றது காட்சிப் பொருளைக் கருத்துப்பொருளாக மாற்றிய பொருள்வகை மாற்று. தனக்கு நன்மையே செய்யும் தன் சொந்த வுறுப்பு என்பது படத் 'தன்னெஞ்சம்' என்றும், நெஞ்சம் குற்ற மென்றறிந்ததை நெஞ்சமே காணச் செய்வதால் 'தானறி குற்றம்' என்றும், நெஞ்சறக் குற்றஞ் செய்யும் துணிவுக்கடுமையும் அதற்குக் கழுவாயின்மையும் நோக்கிக் குற்றப்படின் என்றுங் கூறினார்.