பக்கம் எண் :

நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்.

 

நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - உள்ளத்திற் பற்றாது பற்றற்றவர்போல் நடித்துப் பிறரை யேமாற்றி வாழும் பொய்த் துறவியரைப்போல; வன்கணார் இல் - கொடியவர் இவ்வுலகத்தில் இல்லை.

கன்னியரையும் பிறர் மனைவியரையுங் கற்பழித்தலும், அடைக்கலப் பொருளைக் கவர்தலும், உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தலும்,கொள்ளை யடித்தலும் ,தம் விருப்பம் நிறைவேறும் பொருட்டு எத்துணை நல்லவரையுங் கொல்லுதலும் ,ஆகிய தீவினைகளிலெல்லாம் வல்லவரும் ,கடுகளவும் மனச்சான்று இல்லவருமாதலின் கூடாவொழுக்கத்தினர் போற் கொடியர் பிறரில்லையென்றார்.பற்றற்றவர் போல் நடிப்பவரும் நடியாதவருமாகிய இருவகைக்கொடியோருள், நடிப்பவர் மிகக் கொடியவர் என்பது கருத்து.