பக்கம் எண் :

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

 

மனத்தது மாசு ஆக - தம் மனத்தின்கண் குற்றமிருக்கவும் ; மாண்டார் நீராடி - தவத்தால் மாட்சிமைப் பட்டவர் போற் பலகால் குளிர்ந்த நீரில் மூழ்கி ; மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - அதன்கண்ணே மறைந்தொழுகும் மாந்தர் உலகத்துப்பலர்.

'மாசு' காம வெகுளி மயக்கங்கள். நீராடியதால் உடம்பழுக்கேயன்றி உள்ளத்தழுக்கு நீங்கிற்றிலர் என்பதை யுணர்த்த 'மனத்தது மாசாக' என்றார். மாண்டார் நீராடி' என்பதற்கு மாட்சிமைப் பட்டாரது நீர்மையை யுடையராய் என்று மணக்குடவர் உரைத்ததும் ஓரளவு பொருத்த முடையதே. 'நீராடி' இரட்டுறல்.