பக்கம் எண் :

கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.

 

கணை கொடிது - அம்பு வடிவில் நேராயிருந்தாலும் செயலிற் கொடியது; யாழ் கோடு செவ்விது - யாழ் தண்டால் வளைந்ததேனும் செயலால் இனியது; ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல் - அங்ஙனமே தவஞ்செய்வாருள்ளும் யார் கொடியர் யார் நேர்மையர் என்பதை , அவரவர் கோலத்தாற் கொள்ளாது செயல்வகையாலேயே அறிந்துகொள்க.

கொல்லும் அம்பு கொடியது; இசையால் இன்புறத்தும் யாழ் இனியது. அங்ஙனமே தீயவொழுக்கமுள்ளவர் கொடியவர்; நல்லொழுக்க முள்ளவர் நேர்மையர். 'யாழ் கோடு' என்பதால் அம்பின் வடிவு நேர்மை வருவித்துரைக்கப்பட்டது. 'கொளல்' வியங்கோள்.

'யாழ் கோடு செவ்விது' என்றதை ஆராய்ச்சியில்லாரும் ஆரியப் பார்ப்பனரும் பிறழ வுணர்ந்து , இன்றுள்ள வீணை ஆரியர் கண்டதென்றும் , நால் வகை யாழுட் சிறந்த செங்கோட்டியாழும் வில்யாழ் வகையைச் சேர்ந்ததே யென்றும், உரைப்பாராயினர். யாழ்க் கோட்டின் வளைவு முழுவளைவும் கடைவளைவும் என இரு திறப்படும். வில் யாழ் முழு வளைவும் செங்கோட்டியாழ் கடைவளைவும் உடையன. கடை வளைவு வணர் எனப் பெயர் பெறும். அதையே வளைவெனக் குறித்தார் திருவள்ளுவர் என அறிக.