பக்கம் எண் :

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

 

நிறைமொழி மாந்தர் பெருமை - பயன் நிறைந்த சொற்களையுடைய துறவியரின் பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தில் அவர் கட்டளையாகச் சொல்லப்பெறும் மந்திரங்களே கண்கூடாகக் காட்டிவிடும்.

இக்குறள்,

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப".

என்னும் தொல்காப்பிய நூற்பாவைத் ( 1484 ) தழுவியது. மறை மொழி அல்லது மந்திரம் என்பது, வாய்மொழியும் சாவிப்பும் என இருவகைப்படும். திருமூலரின் திருமந்திரமும், நம்மாழ்வாரின் திரு வாய்மொழியும் வாய்மொழிபோல்வன; கவுந்தியடிகள் காவிரித் தென்கரைச் சோலையொன்றில் வம்பப்பரத்தையும் வறுமொழியாளனுமான இருவரை நரிகளாக்கியது சாவிப்பு. மறை ( வேத ) த் தன்மையுடைய மொழி மறைமொழி ; மனத்திண்மையாற் கருதியது நிறை வேறும் மொழி மந்திரம் . மன் + திரம் = மந்திரம். முன்னுதல் = கருதுதல். முன் - மன். திரம் = திறம். ஒ.நோ : மன்று - மந்து - மந்தை. முரி - முறி ( வளை ).

ஆரியர் வருகைக்கு முற்பட்டதும், எண்வகை வனப்பான பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்னும் எழுநிலத்திற்கும் இலக்கியமாயிருந்ததுமான முதலிரு கழகத் தூய தமிழிலக்கியம் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டதென அறிக.