பக்கம் எண் :

அறத்துப் பால்
துறவறவியல்

அதிகாரம் 29. கள்ளாமை

அஃதாவது , பிறர் பொருளை மறைவாகக் கவராமை. இது கவர்தலும் மறைவிற் செய்தலுமாகிய இருமடிக் குற்றம். ஒரு தீவினையை ஆசையொடு கருதுதலும் அதைச் செய்தலோ டொக்கு மாதலின், கள்ளாமை என்பது களவு செய்யாமையும் களவு செய்யக் கருதாமையும் என இருதிறப்படும். களவு செய்யாமை இல்லறத்திலும் கடியப்படுவதே. ஆயின் , துறவறம் தூய்மை நிலையில் இல்லறத்தினும் உயர்ந்ததாதலின் , களவு செய்யக் கருதுதலும் அதிற் குற்றமாம். இவ்விரு திறத்தையும் ஒரே யிடத்திற் கூறுவதே தக்கதாகலின் , இரண்டையுங் கூறுதற்கேற்ற துறவறவியலிற் கூறினார் . ஆயினும் , களவு செய்யாமை ஈரறத்திற்கும் பொதுவாம்.

களவு செய்தலும் கூடா வொழுக்கத்தைச் சேர்ந்ததினாலும் , காமம் பற்றிய கூடா வொழுக்கமும் களவாய் நிகழ்தலானும் , இவ்வகை யொற்றுமை பற்றி உயர்திணைப் பொருள் பற்றிய களவை விலக்கும் கூடா வொழுக்கத்தின் பின் அஃறிணைப் பொருள் பற்றிய களவு விலக்கும் வைக்கப்பட்டது.

கள் என்னும் முதனிலை முதற்காலத்திற் களவு செய்தலைக் குறித்ததே. கள்ளம் , கள்ளத்தனம் , கள்ளன் , கள்வு , களவு என்னும் சொற்களை நோக்குக. பிற்காலத்திற் கள் என்னும் முதனிலை தன் பொருளை யிழந்தபின், தொழிற் பெயரொடு துணைவினை சேர்ந்த களவுசெய் என்னும் கூட்டுச்சொல் முதனிலை தோன்றிற்று. "கட்குவான் பரிக்கில் ஞேலுவான் பரிக்கேணம்" . என்னும் மலையாளப் பழமொழியையும் நோக்குக.

 

எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் னெஞ்சு.

 

எள்ளாமை வேண்டுவான் என்பான் - கள்வன் என்று பிறரால் இழித்தெண்ணப் படாமையை விரும்புகின்றவன் என்று சொல்லப்படுவான் ; தன் நெஞ்சு எனைத்து ஒன்றும் கள்ளாமை காக்க -தன்மனம் எவ்வகைப் பொருளையும் மறைவிற் கவரக் கருதாவகை காத்துக்கொள்க.

அறிவு போன்ற கருத்துப் பொருளும் அடங்க 'யாதொன்றும் என்றார். நெஞ்சு கள்ளாமை காக்க என்றதனால் , கள்ளுதல் இங்குக் கள்ளக் கருதுதல் என்பது பெறப்படும். என்பான் என்னும் செய்வினை வடிவுச் சொல் செயப்பாட்டுவினைப் பொருள் கொண்டது.