பக்கம் எண் :

உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வே மெனல்.

 

உள்ளத்தால் உள்ளலும் தீதே - தீவினைகளைத் தம் நெஞ்சாற் கருதுதலும் துறவறத்தார்க்குக் குற்றமாம் ; பிறன் பொருளைக் கள்ளத்தாற் கள்வேம் எனல் - ஆதலால் , பிறன் பொருள் எதையேனும் அவனறியாமற் கவர்வேம் என்று கருதற்க.

'உள்ளத்தால்' என்னும் வேண்டாச் சொல் துறவியரின் உள்ளம் தூய்மையாயிருக்க வேண்டும் என்பதை உணர்த்தி நின்றது. ' உள்ளலும்' இழிவு சிறப்பும்மை. 'அல்' இங்கு எதிர்மறை வியங்கோளீறு. இனி, கள்வேமெனல் உள்ளலுந்தீதே எனினுமாம்.