பக்கம் எண் :

அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.

 

அருள் கருதி அன்பு உடையர் ஆதல் - அருளின் அருமை நோக்கிப் பிறரிடத்து அன்புடையரா யொழுதல்; பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்-பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பாரிடத்தில் உண்டாகாது.

தம் சொந்தப் பொருளைத் தீதென்று விட்டுவிட்டுத் துறவு பூண்டோர், பின்பு மீண்டும் பொருளாசை கொண்டு பிறர் பொருளைக்கவரச் சமையம் பார்ப்பாராயின், நீங்கின நோயின் மறுதாக்கு முன்னினும் வலிதாயிருத்தல்போல அவராசையும் வலிதாயிருக்குமாதலின், அவர் கவரக் கருதும் பொருளுடையார் மீது அவர்க்கு அருளோ அன்போ பிறவாதென்பது கருத்து.