பக்கம் எண் :

களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு
மாற்றல் புரிந்தார்க ணில்.

 

களவு என்னும் கார் அறிவு ஆண்மை-களவாண்மை என்று சொல்லப்படும் இருண்ட அறிவுடைமை ; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல்-எல்லாப் பொருள்களின் இயல்பையும் உள்ளவாறு அளந்தறியுந் திறமையை விரும்பினவரிடத்து இல்லை.

இருள் என்பது அகவிருளாகிய மயக்கம். புறவிருளின் கருமை இனம் பற்றி அகவிருட்கும் ஏற்றப்பட்டது. களவையுந் திறம்படச் செய்வதற்கு அறிவு வேண்டியிருப்பதால், அத்தீய அறிவு காரறிவெனப்பட்டது. 'என்னும்' என்பது ஈரிடத்தும் 'ஆகிய' என்னும் பொருளது. ஒளியுடன் இருள்பொருந்தாததுபோலத் துறவறத்திற்குரிய தூய அறிவொடு தீய அறிவு பொருந்தாது என்பது கருத்து.