பக்கம் எண் :

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது.

 

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - நற் குணத்தொகுதி என்னும் மலையின் கொடுமுடியேறி நின்ற முனிவரின் கடுஞ்சினத்தை; கணமேயும் காத்தல் அரிது - சினக்கப்பட்டாரால் நொடி நேரமேனுந் தடுத்தல் முடியாது.

குன்று சிறுமலை. இங்கு மலையென்னும் பொதுப் பொருளது எரிக்கும் நெருப்புப் போன்றது வெகுளி. வேகு - வெகுள் - வெகுளி திண்மையும் பெருமையும் வண்மையும் பற்றி நற்குணத்தொகுதியை மலையாக வுருவகித்தார், இக்குறட்கு, நற்குணமலையாகிய முனிவர் நொடிநேரமேனும் தம் உள்ளத்திற் சினத்தைப் பேணுதலில்லை யென்று பொருள் கூறுவாருமுளர்.அது உரையன்மை,முந்தின குறளாலும் "சொல்லொக்குங் கடிய வேகச் சுடுசரம்" என்னுங் கம்பர் கூற்றாலும் ( பால. தாடகை. 71) கண்டு தெளிக. உம்மை இழிவு சிறப்பு.