பக்கம் எண் :

அறத்துப் பால்
துறவறவியல்

அதிகாரம் 30. வாய்மை

அஃதாவது, பொய்மைக்கு மறுதலையான மெய்ம்மை. கூடாஒழுக்கத்திலும் களவிலும் பொய்ம்மை கலந்திருத்தலாலும், பொய்ம்மை நீக்கப்பெறின் அவ்விரண்டும் நிகழா வாதலாலும், இது கூடாவொழுக்கங் கள்ளாமைகளின்பின் வைக்கப்பட்டது.

 

வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்.

 

வாய்மை எனப்படுவது யாது எனின்-மெய்ம்மையென்று சொல்லப்படுவது யாதென்று வினவின் ; தீமை யாது ஒன்றும் இலாத சொலல்-அது எவ்வகை யுயிர்க்கும் எவ்வகைத் தீங்கும் எட்டுணையும் விளைக்காத சொற்களைச் சொல்லுதலாம்.

வாய்மையின் இலக்கணம் பிறர்க்கும் பிற வுயிர்கட்கும் தீங்கு பயவாமையே யன்றி நிகழ்ந்தது கூறலன்று என்பது கருத்து. இது திருக்குறளை ஒப்புயர்வற்ற உலக அற நூலாக்கும் இயல்வரையறையாம்.

உண்மை, வாய்மை, மெய்ம்மை என்னும் ஒரு பொருட்சொல் மூன்றும், முறையே, உள்ளமும் வாயும் உடம்புமாகிய முக்கரணத்தொடு தொடர்புடையனவாகச் சொல்லப்பெறும். இனி, உள்ளது உண்மை, வாய்ப்பது வாய்மை, மெய் (substance) போன்றது மெய்ம்மை எனினுமாம்.