பக்கம் எண் :

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

 

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க- ஒருவன் தன் நெஞ்சு அறிந்த தொன்றைப் பிறர் அறியவில்லை யென்று கருதிப்பொய் சொல்லா தொழிக; பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச்சுடும்-பொய் சொன்னானாயின், அதனை யறிந்த தன் நெஞ்சே தான் செய்த தீவினைக்குச் சான்றாக நின்று தன்னைக் குற்றஞ் சாட்டித் துன்புறுத்தும்.

"நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை." (கொன்றை.54) முக்கரணவினைக ளெல்லாவற்றையும் நெஞ்சு அறிவதனாலேயே அதற்கு மனச்சான்று என்று பெயர். மனச்சான்று உடனிருந்துரைக்கவும் அதை மறுத்துப் பொய் சொல்வது கொடிய தென்பதை யுணர்த்தவே, "நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்." என்றார் உலகநாதர். 'சுடும்' என்றதினால், மனச்சான்று குத்தியுணர்த்தி மன நோவை யுண்டுபண்ணுவது மட்டுமன்றி, தெய்வச் சான்றாக நின்று வெளிப்படுத்தி அரசன் தண்டனையையும் அடைவிக்கும் என்பது பெறப்படும்.