பக்கம் எண் :

புறந்தூய்மை நீரானமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்.

 

புறம் தூய்மை நீரான் அமையும் - ஒருவனது உடம்புத்தூய்மை நீரால் உண்டாகும்; அகம் தூய்மை வாய்மையான் காணப்படும்- உள்ளத்தூய்மை வாய்மையால் அறியப்படும்.

புறந்தூய்மை அழுக்குப் போதல்; அகத்தூய்மை குற்றம் நீங்குதல். காணப்படுதல் அறியப்படுதல். காணுதல் என்றது அகக் கண்ணாற் காணுதலை. புறத்தழுக்கும் நீரும் போல அகக் குற்றமும் வாய்மையும் காட்சிப் பொருளன்மையின், அறியப்படும் என்றார். வாய்மையால் அகத்தூய்மை உண்டாகும் வகை மேற் கூறப்பட்டது. துறவியர்க்குப் புறந்தூய்மையினும் அகத்தூய்மையே சிறந்ததென்பாம்.