பக்கம் எண் :

அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்.

 

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் - எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் செம்மையான குளிர்ந்த அருளைப் பூண்டொழுகுதலால்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சிறப்பித்துச் சொல்லப்படுபவர் துறவியரே.

அந்தணர் என்னுஞ்சொல் அழகிய குளிர்ந்த அருளையுடைவர் என்னும் பொருளது. அருளாவது ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரைப்பட்ட எல்லாவுயிர்களிடத்தும் இரக்கங் கொண்டு அன்பு செய்தல். இது துறவியர்க்கே இயலும். அதனால், அருளுடைமையைத் துறவுநிலைக்குரிய முதலறமாகக் குறித்தார் திருவள்ளுவர். தமக்கு வாழ்வளித்துக் காக்கும் தலைநாகரிக மக்களையுந் தாழ்வாகக் கருதும் தந்நல ஆணவப் பிராமணர் அந்தணராகார் என்பது, இதனால் அறிவிக்கப்பட்டது. பூணுதல் நோன்பாக மேற்கொள்ளுதல். 'என்போர்' செயப்பாட்டுவினை செய்வினையாக நின்றது; 'மற்று' அசைநிலை. உம்மை முற்றும்மை.