பக்கம் எண் :

யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற.

 

யாம் மெய்யாக் கண்டவற்றுள்- யாம் உண்மையான அறங்களாகக் கண்டவற்றுள்; எனைத்து ஒன்றும் - எவ்வகையிலும்; வாய்மையின் நல்ல பிற இல்லை- மெய்ம்மைபோலச் சிறந்த அறங்கள் வேறில்லை.

'மெய்யா' என்பதில் ஆக என்னும் வினையெச்ச வீறு 'ஆ' எனக் கடைக்குறைந்து நின்றது. வாய்மை தலைமையான அறமாகச் சொல்லப்பட்டிருப்பதால், 'வாய்மையின்' என்பதிலுள்ள 5-ஆம் வேற்றுமையுருபு தனக்குரிய உறழ்ச்சிப் பொருளில் வராது 2-ஆம் வேற்றுமைக்குரிய ஒப்புப் பொருளில் வந்ததாகக் கொள்க.