பக்கம் எண் :

தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற்
றன்னையே கொல்லுஞ் சினம்.

 

தான் தன்னைக் காக்கின் சினம் காக்க- ஒருவன் தனக்குத் துன்பம் நேராமற் காக்க விரும்பினானாயின் தன் மனத்திற் சினம் வராமற் காக்க; காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின் அச்சினம் தன்னையே கெடுக்குங் கடுந்துன்பங்களை வருவிக்கும்.

இல்லறத்தார்க்குச் சினக்கப்பட்டவரால் தீங்கு நேர்தலாலும், துறவறத்தார்க்கு அவர் சினம் அவர் தவப்பயனைக் கெடுத்துப் பிறவித் துன்பத்தையும் அடைவித்தலாலும், 'தன்னையே கொல்லும் சினம்' என்றார். கொல்லுதல் இங்குக் கொல்லுதல்போல் துன்புறுத்தல், "கரும்புபோற் கொல்லப் பயன்படுங்கீழ்" (குறள்-1078) என்பதிற் போல.