பக்கம் எண் :

தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்

 

தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் - பிறர் செய்யுந் தீயவை தனக்குத் தீயனவாயிருக்குந் தன்மையைப் பட்டறிகின்றவன்; மன் உயிர்க்கு இன்னா செயல் என்கொல்- தான் மட்டும் மற்றவர்கட்குத் தீயவை செய்தல் என்ன கரணியம் (காரணம்) பற்றியோ!

இன்ப துன்ப நுகர்ச்சித்திறம் எல்லாவுயிர்க்கும் ஒன்றே யாதலால், தன்னுயிர்க்குத் தீங்கானது மற்றவுயிர்க்கும் தீங்காகுமென்று அறிந்து அதை விலக்க வேண்டியவன் என்னும் கருத்துத் தோன்ற 'தானறிவான்' என்றும், பகுத்தறிவுள்ள உயர்திணையைச்சேர்ந்தவன் இங்ஙனஞ் செய்வது மயக்கத்திற்கிடமானது என்பது தோன்ற என்கொலோ என்றும் கூறினார். 'கொல்' ஐயம், 'ஓ அசை நிலை, மயக்கம் எனினுமாம், 'மன்' மற்று என்னும் இடைச்சொல்லின் மூலம். மற்ற என்னும் பொருளது.