பக்கம் எண் :

பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்.

 

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்- ஒருவர் பிறர்க்குத் தீயவற்றை ஒரு பகலின் முற்பகுதியிற் செய்வாராயின் ; தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்- அதன் விளைவாகத் தமக்குத் தீயவை அப்பகலின் பிற்பகுதியில் அவர் செய்யாமல் தாமே வரும்.

பகலின் முன்பின்னைக் குறிக்கும் 'முற்பகல்' 'பிற்பகல்' என்பன பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை. இலக்கணப்போலி என்பதும் இதுவே. விரைந்து வருதலை யுணர்த்தப் பிற்பகல் என்றும் தீமை செய்யப்பட்டவரல்லாத பிறரிடத்தினின்றும் வருமாதலால் தாமே வரும் என்றும், கூறினார். அத்தகைய வினைகளைச் செய்யற்க என்பது கருத்து.

"முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண்".


என்று (சிலப் . உக : 3 - 4) கண்ணகி கூற்றாக, நெடுஞ்செழியன் முடிவை இக்குறட்கு இளங்கோவடிகள் எடுத்துக் காட்டியிருத்தல் காண்க.

இனி, "தான் வெட்டின குழியில் தானே விழுவான்" என்பதற்கேற்ப, ஒருவன் பிறருக்கு முற்பகல் செய்த தீமைகளே பிற்பகலில் தனக்குத் தீமையாகத் திரும்பி வரும் என்று பொருளுரைப்பினுமாம்.