பக்கம் எண் :

அறத்துப் பால்
துறவறவியல்

அதிகாரம் 33. கொல்லாமை

அஃதாவது இல்லறத்தில் அரசன் கொலைத்தண்டனையும் போர்த்தொழிலுந்தவிர மற்ற வகைகளில் ஈரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை எவ்வுயிரையுங் கொல்லாமையும், துறவறத்தில், சிறப்பாக இறுதிநிலையில், ஓரறிவுயிரையுங் கொல்லாமையும் ஆம்.

இன்னாதவற்றுள் மிகக்கொடியது கொலையாதலாலும் ஓரறிவுயிர்க்கொலை துறவறத்தின் இறுதி நிலையிலேயே ஒழிக்கக் கூடிய தாதலாலும், இது இன்னா செய்யாமையின் பின் வைக்கப்பட்டது.

மரக்கறியுணவும் ஓரறிவுயிர்க்கொலையால் வருவதாலும், முளைக்கவுந் துளிர்க்கவும் கூடிய ஒவ்வொரு விதையும் நிலைத்திணையுறுப்பும் முட்டை போன்றிருத்தலாலும், பிறர் சமைத்த மரக்கறி யுணவுண்பதும், பிறர் கொன்ற வுரியின் ஊனைத்தின்பது போலா மாதலாலும், துறவியர் விரும்புவது வீட்டுலக வாழ்க்கையேயன்றி இவ்வுலக வாழ்க்கையன்றதலாலும், முற்றத் துறந்த முழு முனிவர்.

"கனியேனும் வறிய செங்கா யேனு முதிர்சருகு கந்தமூலங்களேனும்
கனல்வாதை வந்தெய்தி னள்ளிப் புசித்து" ப்

பின்பு இலை சருகுகளையேயுண்டு, இறுதியில் அதுவுமின்றி ஓகத்திலமர்ந்து உடம்பு துறப்பர் என அறிக.

 

அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை யெல்லாம் தரும்.

 

அறவினை யாது எனின் கொல்லாமை- முழுநிறைவான அறச்செயல் எதுவென்று வினவின், அது ஓருயிரையுங் கொல்லாமையாம்; கோறல் பிறவினை எல்லாம் தரும்- கொலைவினை பிற தீவினைகளெல்லாவற்றின் பயனையும் ஒருங்கே தரும்.

கொல்லாமை எதிர்மறை யறவினை. கொல்லுதல் உடன்பாட்டுத்தீவினை. இரண்டும் தன் தன்மையில் முழுநிறைவானவாம். கொல்லுதல் கொல்லாமையின் மறுதலையாதலால், பிற தீவினைப் பயனையெல்லாந் தருவதொடு நல்வினைப் பயனை யெல்லாம் அழித்து விடு மென்பதும் பெறப்படும். ஆகவே, அத்தகைய மாபெருங் கொடுவினையைச் செய்யற்க என்பதாம்.