பக்கம் எண் :

பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.

 

பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் - கிடைத்த வுணவை இயன்றவரை பசித்தவுயிர்கட்குப் பகுத்துக் கொடுத்துண்டு பல்வகை யுயிர்களையும் பாதுகாத்தல்; நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை- அறநூலோர் இருவகை யறத்தார்க்குந் தொகுத்த அறங்களெல்லா வற்றுள்ளும் தலையாயதாம்.

கொல்லா வறத்தைக் கடைப்பிடித்தல் கொலையை நீக்குதல். கொலை உடல் சிதைத்துக் கொள்ளுதலும் உணவளியாமற் கொல்லுதலும் என இருவகை.இரண்டும் விளைவளவில் ஒன்றே. உண்ணாதவுயிரி இறக்குமாதலால் வாழ்நாள் முழுவதும் உணவளித்துக் காத்தல் வேண்டுமென்பது தோன்ற 'ஓம்புதல்' என்றார். நூலோர் என்று பொதுப்படக் கூறியது இயல் நோக்கி அறநூலோரைக் குறித்தது, உணவளித்துக் காத்தல்போற் சிறந்த நன்மை வேறின்மையின் 'தலை' என்றார்.