பக்கம் எண் :

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

 

ஒன்றாக நல்லது கொல்லாமை- முதற்படியாக நல்லற மாவது கொல்லாமையே; அதன் பின்சார நன்று பொய்யாமை- அதற்கு அடுத்தபடியாக நல்லது வாய்மையாம்.

கொல்லாமையைப் பற்றிக் கூறவந்த விடத்துப் பொய்யாமையை ஏன் உடன் கூறினாரெனின், முன்பு வாய்மையதிகாரத்தில் "பொய்யாமை....தரும்". "பொய்யாமை....நன்று", "யாமெய்யா.....பிற". என்று வாய்மையைத் தலைமையாக் கூறியதொடு முரணுமாகலின் , முற்கூறியதை மட்டுப்படுத்தி இரண்டாந் தலைமையாக வரையறுத்தற்கென்க. அங்ஙனமாயின் வாய்மையதிகாரத்திற் கூறியது பொய்யாகாதோவெனின், ஆகாது; அங்குச் சொல்வடிவான அறங்களுள் வாய்மையையும் இங்குச் செயல்வடிவான அறங்களுள் கொல்லாமையையும் கூறி அவ்விரண்டையும் ஒப்பு நோக்கியவிடத்து மண்ணுலகில் மக்கட்கு மட்டுமுரிய வாய்மையினும் அறுவகையுயிர்கட்குமுரியதும் உயிரைக்காப்பதுமான கொல்லாமையைச் சிறந்ததாகக் கண்டமையின் என்க. இனி, கொலையும் செங்கோல் தண்டனையால் நன்மையாவதால் வாய்மை என்பது நன்மை செய்யும் பொய்யையுந் தழுவுவதாலும், தீமை செய்யின் பொய்யாக மாறுவதாலும், திரிபுள்ளதென்பது பொருந்தாது.