பக்கம் எண் :

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேற்
செல்லா துயிருண்ணுங் கூற்று.

 

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்- கொல்லாமையைக் கடைப்பிடித்து ஒழுகுபவனின் வாழ்நாள்மேல் உயிர் உண்ணும் கூற்றுச்செல்லாது - உயிரைக் கவரும் கூற்றுவன் செல்லமாட்டான்.

"இழைத்தநா ளெல்லை யிகவா பிழைத்தொரீஇக்
கூற்றங் குதித்துய்ந்தா ரீங்கில்லை.

என்பதே (நாலடி.6) உண்மையாதலால், உயிருண்ணுங் கூற்று வாழ்நாள் மேற் செல்லாதென்பது வாழ்நாள் நீடிக்கும் என்பதைக் குறிக்குமேயன்றி வேறன்று. வாழ்நாள் நீடிப்பதற்குக் கரணியம் (காரணம்) மரக்கறியுணவும் மனவமைதியும் மக்கள் நல்லெண்ணமும் இருக்கை வளிநிலைப் பயிற்சியும் அறவினைப் பயனும் இறைவன் திருவருளுளாம். வாழ்நாள் நீடிப்பதனால் துறவறத்திற்குரிய மெய்பொருளாராய்ச்சியும் ஓகப்பயிற்சியும் முதிர்ச்சி பெறும்.

"உடம்பா ரழியில் உயிரா ரழிவர்
திடம்பட மெய்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே."

என்று திருமூலர் (திருமந்திரம், 724) கூறியதுங் காண்க.

இனி, "நெடுநா ளிருந்தபேரும்
நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
நெஞ்சுபுண்ணாவர்"


என்று தாயுமானவர் கூறுதலால், காயகற்பத்தினால் வாழ்நாள் நீடித்தலுமாம்.