பக்கம் எண் :

தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.

 

தன் உயிர் நீப்பினும்-ஓர் உயிரியைக் கொல்லாத வழித் தன்னுயிர் தன்னுடம்பினின்று நீங்கிவிடு மாயினும் ; தான் பிறிது இன்னுயிர் நீக்கும்வினை செய்யற்க தான் பிறிதோர் உயிரியின் இனியவுயிரை அதன் உடம்பினின்று நீக்கும் செயலைச் செய்யற்க.

தன்னுயிரைக் காத்தற்குப் பிறிதோ ருயிரியைக் கொல்லும் நிலைமை மூன்றாம் அவை , தன்னைக் கொல்ல வந்த வுயிரியைக் கொல்லுதல், தன் நோய்க்கு மருந்தாக ஓர் உயிரியைக் கொன்று தின்னுதல், தன்னைக் கொன்றுவிடுமென்று நம்பி அதைத்தடுத்தற் பொருட்டு ஒரு பேய்த் தெய்வத்திற்குக் காவு கொடுத்தல் என்பன. இம் முந்நிலைமையிலுங் கொல்லாதிருக்க என்றார் திருவள்ளுவர். கொலை செய்தவழியும் உயிர் உலகத்தில் நிலையாதாகலானும், கொலையாற் கரிசும் கொல்லாமையால் அறமும் வளர்தலானும், கொல்வதினுங் கொலையுண்ணுதலே சிறந்ததென்பது கருத்து, 'பிறிதின்னுயிர்' என்றது இருதிணைக்கும் பொதுவாம்.