பக்கம் எண் :

நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகு மாக்கங் கடை.

 

நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும்-தேவரை நோக்கிச் செய்யும் வேள்வியிற் கொன்றால் இன்ப மாகுஞ் செல்வம் பெரிதாமென்று ஆரியர் கூறினும்; சான்றோர்க்குக் கொன்று ஆகும் ஆக்கம் கடை-தமிழச் சான்றோர்க்குக் கொல்வதினால் வரும் செல்வம் மிக இழிவானதாம்.

'எனினும்' என்னுஞ் சொல்லை "நல்லாறெனினுங் கொளல்தீது" (குறள்.222) என்பதிற்போற் கொள்க. நன்றாகும் ஆக்கமாவது விண்ணுலகத்தில் தேவராகத் தோன்றி நுகரும் இன்பம். வேள்வி வேட்டல் ஆரியர் வழக்கமேயாதலாலும், அதை எதிர்ப்பவர் தமிழரேயாதலாலும், ஆரியர் தமிழர் என்னுஞ் சொற்கள் வருவித்துரைக்கப்பட்டன.

கடைக்கழகக் காலத்திலும் பின்பும் தமிழ வேந்தரும் ஆரிய வேள்வி வேட்டனரேயெனின், அவர் ஆரியப் பார்ப்பனரை நிலத்தேவரென்று நம்பித்தம் அறியாமையாலும் ஏமாற்றப்பட்ட நிலையிலும் செய்தமையால், அது தமிழ அறிஞரால் ஒப்புக்கொள்ளப் பட்ட தன்றென்று கூறி விடுக்க.