பக்கம் எண் :

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று.

 

பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே- ஒருவனுக்குப் பெருஞ்செல்வஞ் சேர்வது ஆடலரங்கிற்குக் காண்போர் கூட்டம் வந்து கூடுவது போன்றதே; போக்கும் அது விளிந்த அற்று- அச்செல்வங் கெடுவதும் அவ்வாடல் முடிந்தபின் அக்கூட்டங் கலைவது போன்றதே.

எத்துணைச் செல்வமும் கெடுமென்றற்குப் 'பெருஞ்செல்வம்' என்றார். 'போக்கும்' என்னும் எச்சவும்மை வருகையைத் தழுவிற்று. பல்வேறிடங்களிலிருந்து பல்வகை மக்கள் வந்து ஆடல் முடிந்தபின் போய்விடுவது போல, பல்வேறு வழிகளில் திரண்ட பல்வகைச் செல்வமும் நல்வினைப் பயன் நீங்கினவுடன் போய்விடும் என்பது. உவமைப் பொருள் விரிவாம். ஏகாரம் தேற்றம்.