பக்கம் எண் :

நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.

 

உயிர்- உயிரானது; நாள் என ஒன்று போல் காட்டி ஈரும் வாளது- நாள் என்று அளவிடுவதாகிய ஒரு கால அளவு போல் தன்னைக் காட்டி வாழ்நாளைச் சமவளவான சிறு சிறு பகுதியாக அறுத்துச் செல்லும் வாளின் வாய்ப்பட்டிருப்பதாகத் தெரியும்; உணர்வார்ப்பெறின் - அதைக் கூர்ந்தறியும் அறிஞரிருப்பாராயின் அவருக்கு.

ஒன்றாய் நித்தமாய் மாறாததாயிருக்கும் காலம் என்னும் கருத்துப்பொருள் , தானாகவன்றிக் கதிரவன் தோற்ற மறைவுகளாலேயே நாட்கூறுபடுவதால், 'நாளென வொன்று போல்' என்றும் , அதுதம் வாழ்நாளை யறுக்கும் வாளென்று உணர மாட்டாதார் நமக்கு நாள் நன்றாய்க்கழிகின்றதென்று மகிழுமாறு மயக்கலின் 'காட்டி' யென்றும் , இடைவிடாது அறுத்துச் செல்லுதலின் வாளின் வாயதென்றும், அதை உணர்வார் அரியராகலின் 'பெறின்' என்றுங் கூறினார்.

வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் - றின்புறுவர்
வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.


என்னும் நாலடி வெண்பாவையும் (46) நோக்குக.