பக்கம் எண் :

உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

 

சாக்காடு உறங்குவது போலும் -ஒருவனுக்குச் சாவு வருதல் உறக்கம் வருதலை யொக்கும்; பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் அவன் மீண்டும் பிறத்தல் உறங்கினவன் திரும்ப விழிப்பதை யொக்கும்.

உயிர்கட்கு ஒரு தனித்த பிறவியில் உறக்கமும் விழிப்பும் மாறி மாறி வருவது போன்றே, தொடக்கமிலியாகவரும் பொது நிலைமையில் இறப்பும் பிறப்பும் மாறி மாறி வருவதும் இயல்பாம் என்பது கருத்து. ஆகவே வீடுபெறாத நிலையில், ஒரு பிறவியால் மட்டு மன்றிப் பலபிறவியாலும் நிலையாமை தோன்றி நிலைப்பதாம்.