பக்கம் எண் :

அறத்துப் பால்
துறவறவியல்

அதிகாரம் 35. துறவு

அஃதாவது, இளமை, செல்வம், உடல் நலம், யாக்கை முதலியவற்றின் நிலையாமையும், எல்லையில்லாது தொடரும் பிறவித்துன்பமும் நோக்கி, துன்பமற்ற நிலையான வீடுபெறும் பொருட்டு, புறமாகிய செல்வம் என்னும் பிறிதின் கிழமைப் பொருளின் கண்ணும் அகமாகிய உடம்பு என்னும் தற்திழமைப் பொருளின் கண்ணும் உள்ள பற்றை விடுதல். அதிகார முறையும் இதனான் விளங்கும்.

 

யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன்

 

யாதனின் யாதனின் நீங்கியான் - ஒருவன் எவ்வெப்பொருளினின்று நீங்கினானோ ; அதனின் அதனின் நோதல் இலன் - அவ்வப் பொருளால் துன்பமுறுத லில்லை.

அடுக்குத் தொடர்கள் பன்மை குறித்தன. நீங்குதல் மனத்தால் நீங்குதல், அதாவது பற்று விடுதல். பொருள்களால் வரும் இம்மைத் துன்பங்கள்.

"ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்
காத்தலு மாங்கே கடுந்துன்பம் - காத்தல்
குறைபடின் துன்பம் கெடினதுன்பம் துன்பக்
குறைபதி மற்றைப் பொருள் (நாலடி. 280)


என்பதனாலுணர்க. மறுமைத் துன்பங்கள் ஈயாமையாலும் செல்வச் செருக்காற் செய்யும் தீவினைகளாலும் வருவன. எல்லாப் பொருள்களையும் ஒருங்கே துறக்க இயலாதார் அவற்றை ஒவ்வொன்றாகத் துறக்கலாமென்றும், அவற்றைத் துறந்ததினால் இம்மையிலும் நன்மை யுண்டென்றும் கூறியவாறு.