பக்கம் எண் :

அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லா மொருங்கு.

 

ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடு பெற விரும்புகின்றவன் ஐம்புல இன்ப நுகர்ச்சியையுங் கெடுத்தல் வேண்டும்; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல்வேண்டும் - அதன்பின் அந்நுகர்ச்சியின் பொருட்டுத் தான் தேடிவைத்திருந்த பொருள்களை யெல்லாம் ஒருங்கே விட்டு விடுதல் வேண்டும்.

புல இன்ப நுகர்ச்சி வீடுபேற்று முயற்சியில் மனத்தைச் செலுத்துதற்குத் தடையாதலின் அதனை 'அடல் வேண்டும்' என்றும், அந்நுகர்ச்சிக் குரிய பொருள்கள் தன்னிடமிருப்பின் அதை விட்டமனம் மீண்டும் அவற்றின் மேற்செல்லுமாதலின் 'ஒருங்கே விடல் வேண்டும்' என்றுங் கூறினார். இதனாற் புறப்பற்று விடுதல் கூறப் பட்டது.