பக்கம் எண் :

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை.

 

பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை-பிறப்பு நீக்கும் முயற்சியை மேற்கொண்டவர்க்கு அதை நீக்கும் வரை கருவியாக நின்று உதவும் உடம்பும் அதிகப்படியாம்; மற்றும் தொடர்ப்பாடு எவன் - அங்ஙனமிருக்கவும் அதற்கு மேலும் சில வேண்டாத பொருள்களின் தொடர்பு எதற்காம்?

பிறப்பு நீக்க முயற்சிக்கு உடம்பின் துணை இன்றியமையாத தேனும், அதனால் இடையறாது பல வீழ்குழிகளும் அமைதலானும், அவற்றாற் கைக்கெட்டியதும் வாய்க்கெட்டாது போய்விடுமோ வென்னும் அச்சம் பிறத்தலானும் ; இறுதி நிலையில் உடம்பும் துறந்தார்க்கு வேண்டாததாகத் தோன்றுவதாம் . அதனாலும் , விரைந்து வீடுபெறல் வேண்டுமென்னும் பேராவலினாலும் உடம்பின் மேலுள்ள பற்று முற்றும் நீக்கப்படும். இது அகப்பற்றுவிடுதலாம். 'உடம்பும்' என்ற உம்மை உயர்வு சிறப்பு. 'கொல்' அசைநிலை.

உடம்பு பருவுடம்பும் நுண்ணுடம்பும் ஆக இரு வகைப்படும். இங்கு உடம்பென்றது பருவுடம்பை. நிலம் முதலிய பூதங்கள் ஐந்தும், செவி முதலிய அறிவுப் பொறிகள் ஐந்தும், வாய் முதலிய கருமப் பொறிகள் ஐந்தும், ஆகப் பதினைந்தும் சேர்ந்தது பருவுடம்பாம். நுண்ணுடம்பு ஐம்புலனும் பதின்காற்றும் வினைவிளைவுங் கூடிய மனம்.