பக்கம் எண் :

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்.

 

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் - தானல்லாத வுடம்பை நானென்றும் தனக்குப் புறம்பான பொருளை என தென்றும் கருதி அவற்றின்மேற் பற்று வைத்தற்கு ஏதுவான மயக்கத்தைக் கெடுப்பவன் ; வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் - விண்ணவர்க்குங் கிட்டாது மேற்பட்ட வீட்டுலகத்தை அடைவான்.

மேற்கூறிய இருவகைப் பற்றுந் துறப்பான் பெறும் பேறு இங்குக் கூறப்பட்டது. ஒருவன் இவ்வுலகில் இன்பம் நுகர்தற்கு நுகரும் உடம்பும் நுகரப்படும் பொருள்களும் வேண்டும். உடம்பு தன்னொடு சேர்ந்திருத்தலால் அகம் என்றும் , அதற்குப் புறம்பான மற்றப் பொருள்களெல்லாம் புறம் என்றும் சொல்லப்படும். இன்ப துன்ப வுணர்ச்சி யொற்றுமையாலும் ஒன்றெனக் கலந்த தோற்றத்தாலும் முக்கரணத் தொழிற் கருவியாதலாலும், ஒருவன் தன்னுடம்பைத் தானாக மயங்கி நானென்று சொல்வதால் அகப்பற்று நான் என்னும் சொல்லாலும், தனக்குச் சொந்தமான பிற பொருள்களையெல்லாம் தனித்தனி எனது என்று சொல்வதால், புறப்பற்று எனது என்னும் சொல்லாலும் குறிக்கப்படும். உடம்பு மேற்கூறிய மூவகையில் உயிரோடு ஒன்றியிருப்பதுடன், உடம்பின் நீடிப்பே உயிர் வாழ்க்கையும் உடம்பின் வலிமையே உயிர் வலிமையுமாதலால், ஒருவனுக்குப் புறப்பற்றினும் அகப்பற்றே விஞ்சியிருக்கும். நிலையாமையாற் சிறிது பொழுதே நுகரும் புறப் பொருளையும் நிலையானவுடமையாகக் கருதுவதால், அதுவும் மயக்கத்தின்பாற்பட்டதே. 'வானோர்க்கும்' என்னும் சிறப்பும்மை தொக்கது. வீட்டுலகத்தின் உயர்ச்சி பற்றியே அதை 'வரன் என்னும் வைப்பு' என்றார் முன்னும் ( 24 )