பக்கம் எண் :

அறத்துப் பால்
துறவறவியல்

அதிகாரம் 36. மெய்யுணர்தல்

அஃதாவது, கடவுள், உயிர், தளை ஆகிய மூன்றன் இயல்புகளையும், உயிருக்குக் கடவுளொடும் உலகத்தொடுமுள்ள தொடர்பு வகைகளையும், ஐம்பூதக் கூறுபாடுகளையும், உடலின் அமைப்பையும், பிறப்பும் வீடும் ஆகிய நிலைமைகளையும், இறைவன் திருவருளாலும் ஓகத்தாலும் உண்மையாக உள்ளபடி யுணர்தல், இது, சமயக் கொண்முடிபு ( சித்தாந்தம் ) கண்டவர் தாமாகவுணர்தலும், பிறர் அவர் உணர்ந்ததை யுணர்தலும், என இரு திறப்படும்.

ஆராய்ந்து கண்ட ஒவ்வோர் உண்மைப் பொருளும் மெய்ப்பொருள் ( தத்துவம்) எனப்படும். இறைவனுண்மையை நம்பாத சாங்கியமதம், ஆத மெய்ப்பொருள் ( ஆன்ம தத்துவம்) இருபத்து நாலொடு ஆதனை ( புருடனை)ச் சேர்த்து, மெய்ப்பொருள் மொத்தம் இருபத்தைந்தெனக் கூறும். திருமாலியம் ( வைணவம் ) அவற்றொடு பரவாசுதேவன் என்னும் இறைவனைச் சேர்த்து, மெய்ப்பொருள் மொத்தம் இருபத்தாறெனக் கூறும், ஆரியச் சார்பான இற்றைச் சிவனியம், ஆதமெய்ப் பொருளொடு சிவமெய்ப் பொருளென்று ஐந்தும், அறிவுமெய்ப்பொருள் ( வித்தியா தத்துவம் ) என்று ஏழும் சேர்த்து, மெய்ப்பொருள் மொத்தம் முப்பத்தாறெனக் கொள்ளும். உலகிலுள்ள நம்பு (ஆத்திக ) மதங்களெல்லாவற்றிற்கும் பொதுவான மெய்ப்பொருள்கள் , பூத மெய்ப்பொருள்கள் இருபதுடன் உயிர் மனம் மதி இறைவன் என்னும் நான்குஞ் சேர்ந்த இருபத்து நான்காகவே முடியும். சமணம், பவுத்தம் முதலிய நம்பா ( நாத்திக ) மதங்களைப் பற்றி இங்கு ஆராய்ச்சியில்லை.

திருவள்ளுவர் ஆரியர் வகுத்த முத்திருமேனி ( திருமூர்த்தி )க் கொள்கையைக் கொண்டவரல்லர். அவர் காலத்தில் அது தோன்றியிருக்கலாம். பிற்காலத்திலேயே அது வேரூன்றியதாக,

"தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக"

(கலி. 2)

"உறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும்"

(கலி. 6)

முதலிய கடைக்கழக இலக்கியச் சான்றுகளால் தெரியவருகின்றது. இறைவன் முத்தொழிலையும் முறையே பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் மூவரைக் கொண்டு செய்விக்காமல், தானே செய்கின்றான் என்பதே திருவள்ளுவர் கொள்கை. இனி, இறைவனை அவர் ஐங்கூறாகப் பகுத்திருக்கவும் முடியாது. இதன் விரிவையும் விளக்கத்தையம் என் 'தமிழர் மதம்' என்னும் நூலுட் கண்டு கொள்க. சிவன் என்பதும் திருமால் ( மாயோன் ) என்பதும் இருசார்த் தமிழர் இறைவனுக்கு இட்ட பெயர்களே.

ஓகத்தின் ( யோகத்தின் ) எண்ணுறுப்புக்களாவன : -

(1) தன்னடக்கம் ( இயமம் ) -பொய், கொலை, களவு, காமம், பொருளாசை ஆகிய ஐந்தையுங் கடிதல்.

(2) தவம் ( நியமம்) - உடலை வருத்துதல், உள்ளத் தூய்மை, மெய்ப் பொருளாராய்ச்சி, பொந்திகை ( திருப்தி), கடவுள் வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்ளல்.

(3) இருக்கை (ஆசனம் ) - மங்கலம் ( சுவஸ்திக ), கோமுகம் ( கோமுக), தாமரை ( பத்ம ), மறம், ( வீர ) , மடங்கல் ( கேசரி), வீறு (பத்திர) , முத்தம் (முக்த), மயில் (மயூர) ஏமம் (சுக) முதலிய 108 இருக்கை வகைகள்.

(4) வளிநிலை (பிராணாயாமம்) - இழுக்கை ( பூரகம்) , விடுகை ( இரேசகம்), நிறுத்தம் ( கும்பகம்) என்னும் மூவகையால் மூச்சையடக்கி யாள்கை.

(5) ஒருக்கம் (பிரத்தியாகாரம்) - மனத்தைப் புலன்கள் மேற் செல்லாவாறு மடக்குதல்.

(6) நிறை (தாரணை) - மனத்தை ஒருவழி நிறுத்துகை.

(7) ஊழ்கம் (தியானம்) - மனத்தை இறைவன் மேற் செலுத்துகை.

(8) ஒன்றுகை (சமாதி) - மனம் இறைவனொடு ஒன்றாகப் பொருந்துகை.

ஒருக்கம், நிறை, ஊழ்கம் என்னும் மூன்றும் முறையே தொகைநிலை, பொறைநிலை, நினைவு என்னும் சொல்லாலும் குறிக்கப்பெறும்.

இருவகைப் பற்றையுந் துறந்தபின் இறைவன் பற்றையே இறுகப்பற்றல் வேண்டுமாதலின், இம்மெய்யுணர்தல் துறவின் பின் வைக்கப்பட்டது. இது பற்றியே, துறவதிகாரத்தின் இறுதியிலும் 'பற்றற்றான் பற்றினைப் பற்றுக' என்று இதற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

 

பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு
மருளானா மாணாப் பிறப்பு.

 

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான்-மெய்ப்பொரு ளல்லாதவற்றை மெய்ப்பொருளென்றுணரும் மயக்கவுணர்வினால்; மாணாப் பிறப்பு ஆம்-சிறந்த வீடு பேறின்றி இழிந்த பிறவியே உண்டாம்.

மயக்க வுணர்வாவது, இறைவனில்லை யென்றும், உலகம் தானாக இயங்குகின்ற தென்றும், நற்காட்சி, நல்லோதி ( நன்ஞானம்) நல்லொழுக்கம் என்னும் மூன்றும் வீடுபேற்றிற்குக் கரணகம் (காரணம்) என்றும், உருவம், நுகர்ச்சி, குறிப்பு, எண்ணம், அறிவு என்னும் ஐங்கந்தமும் கெடுவதே வீடுபேறென்றும், தம் மனம்போனவாறு பிறழவுணரும் திரிபுணர்ச்சியாம். வீட்டையளிப்பவன் இறைவனே யாதலின், அவனருளின்றி எவனும் வீடுபெற வியலாதென்பதாம். வீடுபெறாவிடத்து நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறவிவகுப்பில் முன்போலுழலுவதே திண்ணம். அப்பிறப்புத் துன்பமேயாதலின் 'மாணாப்பிறப்பு' என்றார். இதனால் திரிபுணர்ச்சி பிறப்பிற்குக் கரணகமாதல் கூறப்பட்டது