பக்கம் எண் :

இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

 

மருள் நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு - மயக்கம் நீங்கித் தூய அறிவையடைந்தோர்க்கு; இருள் நீங்கி இன்பம் பயக்கும் - அத்தூய அறிவு நரகத்துன்பத்திற் கேதுவான பிறப்பை நீக்கி வீட்டின்பத்தை நல்கும்.

மாசறுகாட்சி, தூய அறிவு, வாலறிவு, மெய்யறிவு என்பன ஒரு பொருட் சொற்கள். ஐயந்திரிபற்றது தூய அறிவு. கீழே நீண்டு கிடப்பதொன்றைக் கயிறோ பாம்போ என்று ஐயுறுவது ஐயம். கயிற்றைப் பாம்பென்றும் பாம்பைக் கயிறென்றும் பிறழவுணர்வது திரிபு. கயிற்றைக் கயிறென்றும் பாம்பைப் பாம்பென்றும் உள்ளவாறுணர்வது தூய அறிவு. மருள், மயக்கம், திரிபு, பொய்யறிவு என்பன ஒரு பொருட் சொற்கள், நரகத்தைக் குறிக்கும் இருள் என்னுஞ் சொல் இங்கு அதற்கேதுவான பிறப்பைக் குறித்தது. 'நீங்கி' என்பது நீங்கியபின் என்னும் பொருளது.