பக்கம் எண் :

ஐயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து.

 

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - பல கவர்பட்ட ஐயம் நீங்கி மெய்யறிவு பெற்றார்க்கு ; வானம் நணியது வையத்தின் உடைத்து - தாம் இருக்கும் நிலவுலகத்தினும் வீட்டுலகம் நெருங்கியதாம்.

ஐயமாவது, கடவுளும் இருவினைப்பயனும் மறுபிறப்பும் விண்ணுலக வீடுகளும் உண்டோ இல்லையோ என ஒரு வழியுந் துணிபின்றி நிற்றல், எல்லாமதங்களும் தனித்தனி பிறவற்றொடு மாறுபட்டுத்தன்தன் கொள்கையே மெய்யெனக் கூறுதலால், அவற்றுள் எதுமெய் எது பொய் யென்று ஓகப்பயிற்சியில் முதிர்ச்சி பெற்றார் தம் பட்டறிவால் உணர்வராகலின், அவரை 'ஐயத்தினீங்கித் தெளிந்தார்' என்றும், அம்மெய்யறிவு வளரவளர வீடு பேற்றுறுதி மிகுமாதலின் 'வையத்தின் வான நணிய துடைத்து' என்றுங் கூறினார். இதனால், ஐயவுணர்வு பிறப்பிற்குக் காரணமாதலுங் கூறப்பட்டது.