பக்கம் எண் :

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு.

 

மெய் உணர்வு இல்லாதவர்க்கு - மெய்யறிவைப் பெறாதவர்க்கு; ஐ உணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே - புலன்களால் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் திரும்பித் தமக்கு வயப்பட்ட விடத்தும் , அதனாற் பயனில்லையாம்.

ஐந்தாகிய வுணர்வு ஐம்புலன்மேற் செல்லும் மனம். அதையெய்துதலாவது புலன்மேற் செல்லாதவாறு மடக்கி ஒருவழி நிறுத்தும் நிறை. சிறப்பும்மை எய்துதற் கருமையை யுணர்த்திற்று. இக்குறளாலும் மெய்யறி வுடையார்க்கே வீடு பேறென்று மெய்யறிவின் இன்றியமையாமை கூறப்பட்டது.