பக்கம் எண் :

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

 

ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மை மக்கட் பிறப்பில் மெய்ப்பொருள் நூல்களைக் கற்றும் பட்டறிவுள்ள மெய்யோதியரால் செவியறிவுறுத்தப் பெற்றும் மெய்ப்பொருளுணர்ந்தவர்; மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வராத வழியைப் பெறுவர்.

உலகநூற் கல்வி போன்றே மெய்ப்பொருட் கல்வியும் பல்வேறு நிலையிற் பல்வேறு ஆசிரியர்பாற் கற்றுங் கேட்டுமறிய வேண்டியிருப்பதால் 'கற்று' என்றும், நிலவுலகிலன்றித் தேவருலகில் வீடுபேற்று முயற்சிக்கிடமின்மையால் 'ஈண்டு' என்றுங் கூறினார். 'ஈண்டுவாரா நெறி' வீட்டு நெறி. வீட்டையளிப்பது இறைவனேயாதலால் அவனை யறிவதற்கு ஆம்புடைகள் (உபாயங்கள்) கல்வி, கேள்வி, தெளிவு, உன்னம் (பாவனை) என நான்காம். கேள்வியும் கல்வியுளடங்குமாதலின் அவையிரண்டும் இங்கே ஒருங்கே கூறப்பட்டன.