பக்கம் எண் :

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு.

 

பிறப்பு என்னும் பேதைமை நீங்க - பிறப்பிற்கு முதற்கரணகமாகிய அறியாமை கெட ; சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - வீட்டிற்கு வினைமுதற் கரணகம் (நிமித்தகாரணம்) ஆகிய செவ்விய பொருளை அறிவதே ஓகியர்க்கு அறிவாவது.

'பிறப்பென்னும் பேதைமை' என்றும், 'சிறப்பென்னுஞ் செம்பொருள்' என்றும் கருமகத்தைக் கரணகமாகச் சார்த்திக் கூறினார். எல்லா இன்பங்களுள்ளுஞ் சிறந்ததாகையால் வீடு 'சிறப்பு' எனப்பட்டது. எத்துணைப் பாகுபாடுமின்றி ஒன்றாய், முதலும் முடிவுமின்றி நித்தமாய், பிறிதொன்றோடும் உண்மையிற் கலவாது தூய்மையாய், ஒரு வகையிலும் ஒப்பற்ற தனிநிலையாய், எல்லாப் பொருளையும் பற்றி நின்றும் அவற்றால் தாக்குண்ணாததாய், எத்துணைக் காலமாகியுந் திரியாததாய், என்றும் ஓரு தன்மையதாக நிற்றல் பற்றிப் பரம்பொருளைச் 'செம்பொருள்' என்றார். 756-ஆம் குறளில் 'மெய்ப்பொருள்' என்றும், அடுத்த குறளில் 'உள்ளது' என்றும் கூறியதும் இது பற்றியே. அப்பொருளைக் காண்கையாவது, ஆதன் தன் அறியாமை நீங்கி அதை இடைவிடாது எண்ணித் தன் உள்ளத்தால் அதனொடு இரண்டறக் கலத்தல். காண்கை யென்றது அகக்கண்ணாற் காண்டல். உயிர் உடம்பினின்று நீங்கும்போது அதன் எண்ணம் எதைப் பற்றியதோ அதுவாய் அது தோன்றுமென்பது சமய நூற்றுணிபாகலின், வீடு பெறுவார்க்கு அக்காலத்துப் பிறவிக்கேதுவான எண்ணம் இல்லாமைப் பொருட்டு இறைவனையே உன்னுதல் இன்றியமையாததாதலால், இதனை இடைவிடாது பயில வேண்டுமென்பது கருத்து. இதனால் உன்னுகை கூறப்பட்டது