பக்கம் எண் :

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

 

சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் - வீடுபெற முயல்பவன் எல்லாப் பொருட்குஞ் சார்பான செம்பொருளை யுணர்ந்து இருவகைப்பற்றும் நீங்க ஒழுக வல்லனாயின்; சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா - அவனை முன்பு சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வொழுக்கங்களைக் கெடுத்துப் பின்பு சாரமாட்டா.

'சார்பு' தொழிலாகு பெயர். சாரப்படும் பொருளைச் சார்பு என்றார். சார்பு இரண்டனுள், முன்னது வீட்டிற்கேதுவாகிய நற்சார்பும், பின்னது பிறப்பிற்கேதுவாகிய தீச்சார்புமாம். ஒழுக்கம் என்றது, ஓக நெறியொழுக்கத்தின் எண்ணுறுப்புக்களுட் சிறப்பாக ஒருக்கம், நிறை, ஊழ்கம் , ஒன்றுகை என்னும் இறுதி நான்கையும் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள், பிறப்பு தொடக்கமிலியாய் வருதலின் உயிரால் ஈட்டப்பட்ட அளவில்லா வினைகளுள் இறந்தவுடம்புகளாலும் பிறந்தவுடம்பாலும் நுகர்ந்தன போக இனிமேல் நுகருமாறு எஞ்சிநின்றனவாம் . அவை ஒளியின் முன் இருள்போல ஓக வொழுக்கத்தினாலும் இறைவன் திருவருளாலும் கெடுதலால் , 'மற்றழித்துச்சார்தரா' என்றார் . தீவினையொடு கலந்ததினால் நல்வினைப்பயனும் நோயெனப்பட்டது. பிறப்பு அறும்போதே அதனொடு சேர்ந்த பழந்துன்பங்களுங் கெடுதல் இதனாற் கூறப்பட்டது.