பக்கம் எண் :

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

 

வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - பிறப்பெல்லாந்துன்பமாதலை யறிந்தவன் ஒன்றை விரும்பின் பிறவாமையைத் தான் விரும்புவான்; அது வேண்டாமை வேண்ட வரும் - அப்பிறவாமை ஒரு பொருளின் மேலும் ஆசைகொள்ளாமையை விரும்பி மேற்கொள்ளின் அவனுக்குத்தானே வந்து சேரும்.

தொடக்கமிலியாகப் பிறப்புப் பிணிமூப்புச் சாக்காட்டால் தொடர்ந்து துன்பமுற்று வருகின்றவனுக்கு இயல்பாகவே பிறவி நீக்கத்தின்மேல் ஆசையுண்டாகு மாதலால், பிறவாமை வேண்டும் என்றார். 'வேண்டும்' செய்யும் என்னும் வினைமுற்று. 'வேண்ட' என்றது வேண்டி மேற்கொள்ளுதலை. 'மற்று' வினைமாற்றிடைச் சொல். இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி.