பக்கம் எண் :

வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்ப தில்.

 

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை - ஒரு பொருளின்மேலும் ஆசை கொள்ளாமை யொத்த சிறந்த செல்வம் இம் மண்ணுலகத்தில் இல்லை; ஆண்டும் அஃது ஒப்பது இல் - இனி இதனினுஞ் சிறந்ததாகச் சொல்லப்பெறும் விண்ணுலகத்திலும் அதையொப்பது ஒன்றுமில்லை.

வேண்டாமை வீட்டுலகத்தைத் தருதலின் அதனை விழுச்செல்வமென்றார். கண்டறிந்த வுலக வுண்மை கேட்டறிந்த வுலகவுண்மையினுந் தெளிவாதலின் முற்கூறப் பட்டது.