பக்கம் எண் :

அஞ்சுவ தோரு மறனே யொருவனை
வஞ்சிப்ப தோரு மவா.

 

ஒருவனை வஞ்சிப்பது அவா - அருளுடைமை முதல் மெய்யுணர்தல் ஈறாகச் சொல்லப்பட்ட எல்லாத்துறவறங்களையுங் கடைப்பிடித்து வீடுபெறும் நிலையிலுள்ள ஒருவனையும், சோர்வு கண்டு புகுந்து மீண்டும் பிறப்பின்கண்வீழ்த்திக் கெடுக்கவல்லது அவாவாம்; அஞ்சுவதே அறன் - ஆதலால் அவ்வவாவிற்கு அஞ்சி அது நேராவாறு காத்துக்கொள்வதே இறுதியில் மேற்கொள்ள வேண்டிய அறமாம்.

தொடக்க மிலியாக வந்த அவா, முற்றத் துறந்தவன் ஒரோவழிச் செம்பொருள் காண்டலை யொழிந்து கவனக் குறைவால் தன்னைக் காவானாயின், அது வழியாக அவனறியாமற் புகுந்து மீண்டும் பிறப்பினையுண்டாக்கு மாதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். அது வராமற் காத்தலாவது இடைவிடாது உன்னத்தில் ஊன்றுதல். 'ஓரும்' ஈரிடத்தும் அசை நிலை. பிரித்துக் கூட்டப்பட்ட ஏகாரம் பிரிநிலை.