பக்கம் எண் :

இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின்.

 

அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - அவா என்று சொல்லப்படும் கடுந்துன்பம் ஒருவர்க்குக் கெடுமாயின்; ஈண்டும் இன்பம் இடையறாது - அவர் வீடு பெற்ற பின்பு மட்டுமன்றி அதற்கு முன்பு இங்கு உடம்போடு நின்ற விடத்தும் இன்பம் இடைவிடாது தொடரும்.

துன்பத்துள் துன்பமாவது, பிறதுன்பங்களெல்லாந் துன்பமாகத் தோன்றாவாறு பொறுக்குந்தன்மை யற்ற துன்பம். அவாவினாலுண்டாகுந் துன்பத்தை அவாவென்னுந் துன்பமென்று கரணகத்தைக் கருமகமாகச்சார்த்திக் கூறினார். பரம்பொருளொடு உள்ளத்தாற் கூடுதலே பேரின்பமாகலின், அவாவறுத்து அங்ஙனஞ் செய்தார் உடம்போடு கூடிநின்றவிடத்தும் அவ்வின்பந்துய்ப்பர் என்பது இங்குக் கூறப்பட்டது.