பக்கம் எண் :

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை

 

அறத்து ஆறு இது என வேண்டா - அறத்தின் பயன் இதுவென்று உரையளவையால் ஒருவர் அறிவிக்க வேண்டியதில்லை ; சிவிகை பொறுத்தானோடு ஊந்தான் இடை - பல்லக்கைச் சுமப்பானோடு அதில் ஏறிச் செல்வானிடைப் பட்ட காட்சியளவையாலேயே அது அறியப்படும்.

இதுவே ஆசிரியர் கருத்தென்பது, பின்னர் அவர் ஆங்காங்கு நூலிற் கூறும் கூற்றுக்களாலும், பல்பிறவியும் பழவினையும் பற்றி அவர்க்கிருந்த நம்பிக்கையாலும்,

"செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்-வையத்து
அறும்பாவ மென்னவறிந் தன்றிடார்க் கின்று
வெறும்பானை பொங்குமோ மேல்".

என்னும் ஒளவையார் கூற்றாலும்,

(நல்வழி-17)

"Need not in words to dwell on virtue's fruits: compare .The man in litter borne with them that toiling bear!"

என்னும் போப்பையர் மொழிபெயர்ப்பாலும், அறியப்படும்.

பல்லக்கைச் சுமப்பாரையும் அதில் ஏறிச் செல்வானையுங் காட்டி இதுதான் அறத்தின் பயன் என்று கூறாதே. என்பதை இக்குறளுரையாகக் கூறுவது ; இக்காலத்திற் கேற்குமேயன்றி ஆசிரியர் கருத்தாகாது.

ஆறென்பது வழி, அறத்தின் வழிப்பட்ட பயனை ஆறென்றார் அறியப்படும் என்பது சொல்லெச்சம்.